ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் என்றால் என்ன?

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் என்றால் என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் என்பவை பல்வேறு கேபிட்டல் மார்க்கெட்டுகளில் இருக்கும் ஒரே விதமான அசெட்டுகளுக்கு ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்ற ஒரு ஹைப்ரிட் வகை மியூச்சுவல் ஃபண்ட்களாகும். ஸ்பாட் மார்க்கெட் மற்றும் ஃபியூச்சர் மார்க்கெட் போன்றவற்றில் ஒரே அசெட்டின் விலை வேறுபாடுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே ஆர்பிட்ரேஜ் என்கிறோம்.

ஸ்பாட் மார்க்கெட் என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரு அசெட்டுக்கு ஒரு விலையை ஒப்புக்கொண்டு அப்போதே அந்த அசெட்டுக்கு ரொக்கத்தைப் பரிமாற்றிக்கொள்ளும் இடமாகும். இதற்கு மாறாக, ஃபியூச்சர்ஸ் மார்க்கெட் என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரு அசெட்டுக்கான எதிர்காலத் தேதிக்குரிய விலையை ஒப்புக்கொள்வார்கள். அதாவது, எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட விலைக்கு ஒரு அசெட்டை வாங்க அல்லது விற்க, இந்த இரு தரப்பும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.

ஸ்பாட் விலைகள், அந்த நேரத்திலான வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில், எதிர்காலத்தில் வழங்கல் மற்றும் தேவை எப்படி இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் அசெட்டின் விலை இருக்கும்.

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் ஈக்விட்டி, டெப்ட், மனி மார்க்கெட் ஆகிய இன்ஸ்ட்ருமென்ட்களில் வர்த்தகம் செய்யக்கூடும். எனினும், அவை விலை வேறுபாட்டை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, இரண்டு வெவ்வேறு மார்க்கெட்டுகளிலும் ஒரே அளவு அசெட்டை வாங்கவும் விற்கவும் வேண்டும்.

செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ் போர்டு ஆஃப் இந்தியா' வழிகாட்டுதல்களின்படி, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் தங்களது ஃபண்ட்களில் குறைந்தபட்சம் 65%-ஐ ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதோடு, அவற்றிற்கு ஈக்விட்டி இன்ஸ்ட்ருமென்ட்களாக வரி விதிக்கப்படும்.

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் எப்படி வேலை செய்கின்றன?

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் இரண்டு வெவ்வேறு மார்க்கெட்டுகளில் ஒரே அளவு அசெட்டை வாங்கி, விற்பதால் கிடைக்கும் விலை வேறுபாட்டில் ரிட்டர்ன்களைப் பெறும். மார்க்கெட்டுகள் முற்றிலும் செயல்திறன் மிக்கவையாக இருப்பதில்லை, இதனால் வெவ்வேறு மார்க்கெட்டுகளில் விலைகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இவை வேலை செய்கின்றன. 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். X நிறுவனத்தின் ஒரு பங்கு கேஷ் மார்க்கெட்டில் ரூ. 1,000-க்கு வர்த்தகம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டுகளில் பொதுவாக பிரீமியம் இருக்கும். ஆகவே, அதே செக்யூரிட்டியின் விலை ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் ரூ. 1,030 ஆக இருக்கலாம்.

X நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் கேஷ் மார்க்கெட்டில் ரூ. 1,000-க்கு வாங்கி அதை ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் ரூ. 1,030-க்கு விற்க முடியும். இதில் மூன்று வெவ்வேறு சூழல்கள் ஏற்படலாம். ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் காலாவதியாகும் தேதியன்று பங்கின் விலை ரூ 1,100-க்குச் செல்கிறது. அப்போது கேஷ் மார்க்கெட்டில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் ரூ. 100, ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 70. கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்களுக்கு ரூ. 30 லாபம்.

பங்கின் விலை ரூ. 900-க்குக் குறைந்தால், அப்போது கேஷ் மார்க்கெட்டில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 100, ஆனாலும் ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் நீங்கள் ரூ. 130 லாபம் அடையலாம். மொத்தத்தில் ஒரு பங்கிற்கு உங்களுக்கு லாபம் ரூ. 30. விலைகள் மாறாமலே இருந்தால், அப்போதும் கூட ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் நீங்கள் ரூ. 30 லாபம் பெறுவீர்கள். இதைத் தான் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் செய்கின்றன.  வெவ்வேறு மார்க்கெட்டுகளில் நிலவும் விலை வேறுபாடுகளை சாதகமாகப் பயன்படுத்தி, லாபம் அடையக்கூடிய சூழலை உருவாக்கிக்கொள்கின்றன.


ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களின் பலன்கள்

  1. ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில் கிட்டத்தட்ட விலை ரிஸ்க் இல்லை என்றே சொல்லலாம். இந்த ஃபண்ட்களின் ஈக்விட்டி எக்ஸ்போஷர் முற்றிலும் ஹெட்ஜிங் செய்யப்படுகிறது.
  2. பரிமாற்றத்தால் செட்டில்மென்ட் கிடைப்பது உத்தரவாதம் என்பதால், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது எதிர்தரப்பு சார்ந்த ரிஸ்க்கும் இல்லாமல் போகிறது.
  3. மார்க்கெட்டுகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் சமயங்களில், கேஷ் மற்றும் ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டுகளில் மாறுகின்ற நிலையை எடுப்பதன் மூலம் ஆர்பிட்ரேஜ் ஃபண்டால் கணிசமான லாபத்தைப் பெற்றுத்தர முடியும்.
  4. ஹைப்ரிட் ஃபண்ட்களாக இருந்தாலும், இவை ஈக்விட்டிகள் என்றே வரி விதிக்கப்படுகின்றன.

முதலீடு செய்யும் முன்பு மனதில் கொள்ள வேண்டியவை

1. ரிஸ்க்
ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் விலை அல்லது எதிர் தரப்பு ரிஸ்க் இல்லாதவையாக இருக்கலாம். ஆனாலும் டெப்ட் இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்யப்படும் ஃபண்ட்களுக்கு கிரெடிட் ரிஸ்க் ஏற்படும் வாய்ப்பு இருக்கலாம். அதுமட்டுமின்றி, பீரிஷ் மார்க்கெட்டுகளில் கேஷ் விலைகளின் மீது தள்ளுபடி வழங்கி ஃபியூச்சர்ஸ் மார்க்கெட் வர்த்தகம் செய்யக்கூடும் என்பதால், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் பீரிஷ் மார்க்கெட்டுகளில் நன்றாக செயல்படாமல் போகலாம்.

2.ரிட்டர்ன்
ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் கணிசமான ரிட்டர்ன்களை வழங்குகின்றன.. குறைந்தது முதல் நடுத்தர கால அளவுக்குள் பணம் ஈட்ட விரும்பினால், இவை அதற்கு ஏற்ற முதலீடுகள் தான். எனினும், மற்ற மார்க்கெட்-லிங்க்டு இன்ஸ்ட்ருமென்ட்கள் போலவே லாபத்திற்கு உத்தரவாதம் கிடையாது.

3. முதலீட்டுக் கால அளவு
3 முதல் 6 மாதங்கள் வரை முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் மிகவும் ஏற்றவை.

4. முதலீட்டுத் தொகை
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்களைவிட லம்ப்சம் தொகையாக ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில் முதலீடு செய்வது சிறந்தது.

5.ஸ்கீம் ஆஃபர் ஆவணம்:
ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் முதலீடு செய்யும் முன்பு, ஸ்கீம் ஆஃபர் ஆவணத்தை கவனமாகப் படிக்க வேண்டியது முக்கியம். முதலீட்டின் நோக்கம், முதலீட்டு உத்தி, ரிஸ்க்குகள், அசெட் ஒதுக்கீடு, ஃபண்டுக்கான கட்டணங்கள் போன்றவை பற்றிய முக்கியமான தகவல்கள் அந்த ஆவணத்தில் இருக்கும்.

6.அசெட் ஒதுக்கீடு:
முன்பே கூறியது போல், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் ஈக்விட்டி மற்றும் டெப்ட் இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்பவை. ஃபண்டின் அசெட் ஒதுக்கீட்டைப் புரிந்துகொண்டு, உங்கள் முதலீட்டு இலக்குகளுக்கும் ரிஸ்க்கை எதிர்கொள்ளும் திறனுக்கும் ஏற்ற வகையில் ஒதுக்கீடு உள்ளதா என்று கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

7. நிர்வாகக் கட்டணங்கள்:
எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களுக்கும், ஃபண்டை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும். நிர்வகிக்கப்படும் அசெட்டுகளின் குறிப்பிட்ட சதவீதத்தில் இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது, ஃபண்டில் கிடைக்கும் ரிட்டர்ன்களில் இருந்து அதற்கான கட்டணம் கழிக்கப்படும்,. ஃபண்ட் வசூலிக்கும் நிர்வாகக் கட்டணம் பற்றியும் அது உங்கள் ரிட்டர்ன்களை எப்படி பாதிக்கும் என்பது பற்றியும் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

இறுதிக் கருத்து

சுருக்கமாக, ரிஸ்க் குறைவான, நடுத்தரமான அளவில் ரிட்டர்ன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் முதலீடு பொருத்தமானது. எனினும், முதலீட்டு நோக்கம், அசெட் ஒதுக்கீடு, நிர்வாகக் கட்டணங்கள், ரிஸ்க்குகள் போன்றவை பற்றி நன்கு யோசித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். மேலும் ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் முதலீடு செய்யும் முன்பு இதுவரையான செயல்பாடுகள் பற்றிய தகவலை ஆராய்ந்து பார்ப்பதும் முக்கியம். ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மேலும் தெளிவு பெற உங்கள் நிதி ஆலோசகரிடம் பேசுங்கள்.

பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்