டார்க்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் தீமைகள் என்னென்ன?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்வதில் உள்ள குறைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் (TMF) நிலையான முதிர்ச்சித் தேதிகளைக் கொண்ட ஓப்பன் எண்டட் டெப்ட் ஃபண்ட்களாகும். இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோக்கள், ஃபண்டின் முதிர்ச்சித் தேதிக்கு ஏற்ப காலாவதித் தேதி அமைக்கப்பட்ட பாண்டுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் எல்லா பாண்டுகளும் முதிர்ச்சித் தேதி வரை தக்கவைக்கப்படும். இது வட்டி விகித ரிஸ்க்கைக் குறைக்க உதவுகிறது, அதே சமயம் ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கும் என்றும் வெகுவாகக் கணிக்க முடிகிறது. ஆனாலும் TMFகளில்  முதலீடு செய்யும் முன்பு அவற்றிலுள்ள குறைகள் பற்றியும் முதலீட்டாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ஃபண்ட்கள் டெப்ட் ஃபண்ட்களில் புதிய வகையாகும், ஆகவே இந்த வகையில் மிகக் குறைந்த தெரிவுகளே உள்ளன. இந்த வரம்பின் காரணமாக, முதலீட்டாளர் தேர்வு செய்ய முதிர்ச்சி வகைகள் குறைவாகவே இருக்கலாம். அதாவது, குறிப்பிட்ட முதலீட்டுக் காலத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஃபண்டைக் கண்டறிய முடியாமல் போகலாம். அதோடு, இந்த வகைக்கு நாம் நம்பிக்கை வைத்துச் செயல்படக்கூடிய வகையில் கடந்த கால செயல்திறன் குறித்த பதிவுகளும் இல்லை.

வட்டி விகித ரிஸ்க் குறைவாக இருப்பதும், ரிட்டர்ன் குறித்துத் தெரிந்துகொள்ள முடிவதும் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டின் நன்மைகளில் உள்ளடங்கும். ஆனால், முதிர்ச்சி வரை முதலீட்டாளர் தொடர்ந்து முதலீட்டைத் தக்கவைத்தால் மட்டுமே இந்த இரண்டு நன்மைகளும் கிடைக்கும். ஆகவே, இதனால் முதலீட்டாளர்களுக்கு குறைவான ரிட்டர்ன்ஸ் கிடைக்க நேரலாம், அதோடு அவசர சூழ்நிலைகளில் முதிர்ச்சிக்கு முன்பு பணமாக மாற்ற வேண்டியிருந்தால், வட்டி விகித மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நடுத்தரம் முதல் நீண்ட காலம் வரையிலான இலக்கு (5-7 ஆண்டுகள்) உங்களுக்கு இருந்தால் மற்றும் ஃபண்ட் முதிர்ச்சி அடையும் வரை உங்களால் முதலீட்டைத் தக்கவைக்க முடியும் என்றால் மட்டுமே நீங்கள் TMF ஃபண்ட்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

செயலில் இருக்கின்ற வட்டி விகிதங்களே முதலீட்டுக்குப் பொருந்தும் என்பதே டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களின் மிகப் பெரிய குறைபாடாகும். இது ஒட்டுமொத்த ரிட்டர்னில் குறிப்பாக, எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கும்பட்சத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதாரம் ஒரு வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும்போது அல்லது தொடர்கின்ற ஸ்டிமுலஸ் பேக்கேஜை அரசாங்கம் குறைக்கும்போது இப்படி ஆகும். ஏனெனில் இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருக்கும், அதன் பிறகோ அவை அதிகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது. வட்டி விகிதங்கள் அதிகரிப்பது, பாண்டு விலைகளிலும் டெப்ட் ஃபண்ட் ரிட்டர்ன்ஸிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

TMF ஃபண்ட்கள் அவற்றுக்கு அடிப்படையாகத் திகழும் பாண்டு இன்டெக்ஸில் முதலீடு செய்வதால், மற்ற இன்டெக்ஸ் ஃபண்ட்களைப் போலவே இவையும் டிராக்கிங் பிழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வகைக்கு செயல்திறன் வரலாறு கிடைக்காது, ஆனால் ஒரு குறிப்பிட்ட TMF-இல் இருந்து ரிட்டர்ன்ஸ் எப்படிக் கிடைக்கும் என்பதை அதன் பாண்டு இன்டெக்ஸ்கள் ஓரளவு சரியாகவே காட்டும். எனினும், ரிட்டர்னை ஊகிப்பதில் இந்த டிராக்கிங் பிழை, அதாவது உண்மையான ஃபண்ட் ரிட்டர்ன்ஸுக்கும் பெஞ்ச்மார்க் ரிட்டர்னுக்கும் இடையிலான வேறுபாடு ஒரு பிரச்சனையாகக்கூடும்.

இவை இயல்பிலேயே பேசிவ் பண்பைக் கொண்டுள்ளதால், டெப்ட் மார்க்கெட்டின் தன்மை குறுகிய காலத்தில் மாறும்பட்சத்தில் (உதாரணமாக கிரெடிட் ரேட்டிங் மாறுவது அல்லது வட்டி விகிதங்களை RBI மாற்றுவது போன்று), பல்வேறு வகை ரிஸ்க்குகளை நிர்வகிக்க ஃபண்ட் மேனேஜருக்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. மார்க்கெட்டின் தன்மை பற்றி என்ன தெரிந்திருந்தாலும், ஃபண்டின் அடிப்படையாக உள்ள இன்டெக்ஸில் உள்ள பாண்டுகளைத் தக்கவைப்பதைத் தவிர மேனஜருக்கு வேறு எதுவும் வழி கிடையாது. ஆகவே, டெப்ட் ஃபண்ட்களில் குறுகிய கால முதலீடுகளைச் செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சாதகமற்ற அம்சமாக இருக்கலாம். அப்படிப்பட்ட முதலீட்டாளர்கள் TMFகளுக்கு பதிலாக குறுகிய கால மெச்சூரிட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்வது நல்லது.

உங்கள் முதலீடுகளில் ஒன்றாக டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களைச் சேர்க்கும் முன்பு, அதன் நிறை குறைகளைப் பற்றி நன்கு யோசித்துக்கொண்டு செயல்படுவது நல்லது. அதுமட்டுமின்றி, ETFகளாகக் கிடைக்கின்ற டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு டிமேட் கணக்கு இல்லாவிட்டால், இதுவும் ஒரு சிறிய சிக்கலாகக்கூடும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்