சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் என்பது என்ன?
2 நிமிடம் 32 வினாடி வாசிப்பு

சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) என்பது காலப்போக்கில் ஒரு முதலீட்டில் இருந்து மற்றொன்றுக்கு முதலீடுகளை படிப்படியாக டிரான்ஸ்ஃபர் செய்ய முடிகின்ற வசதியை வழங்கும் நிதி உத்தியாகும். ஈக்விட்டி, டெப்ட் போன்ற அசெட் வகைகளுக்கு இடையே முதலீடுகளை மாற்ற இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது மார்க்கெட் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அதே சமயம் ரிஸ்க்கை நிர்வகிக்கவும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. ஒரே முறை பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு பதில், சீரான கால இடைவெளிகளில் பல வகையானவற்றில் விரவியிருக்கும்படி செய்ய இது உதவுகிறது.
சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளானின் சிறப்பம்சங்கள்
STPகள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்குகின்றன. மார்க்கெட்டின் நிலைமையைப் பொருட்படுத்தாமல், முதலீடுகள் தொடர்ச்சியான இடைவெளிகளில் செய்யப்படும் என்பதால், குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் ஏற்படக்கூடிய நகர்வுகளைக் கணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வதன் மூலம், டைமிங் ரிஸ்க்கைக் குறைக்கின்றன.
காலப்போக்கில் முதலீடுகளை பரவலாக்குவதன் மூலம், STPகள் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்கவும் உதவுகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்டுகளையும் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்டுகளையும் வாங்க முடியும். இந்த உத்தி நெகிழ்த்தன்மை கொண்டது, முதலீட்டாளர்கள் தங்களது நிதி இலக்குகளின் அடிப்படையில் டிரான்ஸ்ஃபர் தொகையையும் கால அளவையும் தங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி STPகள் குறைந்த ரிஸ்க் உள்ள டெப்ட் ஃபண்டுகள் மற்றும் அதிக ரிஸ்க் உள்ள ஈக்விட்டி ஃபண்டுகள் ஆகிய இரண்டையும் சமநிலையில் வைத்துக்கொள்வதன் மூலம் டைவர்சிஃபிகேஷனை இவை ஊக்குவிக்கின்றன. இதனால் பல்வேறு ரிஸ்க் தாங்கும் திறன் அளவுகளைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இந்த STPகள் ஏற்றவையாக விளங்குகின்றன.
சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் வேலை செய்யும் விதம்:
- டெப்ட் ஃபண்டில் தொடக்க முதலீடு: குறைந்த ரிஸ்க் கொண்ட டெப்ட் சார்ந்த ஃபண்டில் முதலீட்டாளர் பெரிய தொகையை முதலீடு செய்து தொடங்குகிறார், இது காலப்போக்கில் வட்டியை வழங்கும்.
- ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு வழக்கமான டிரான்ஸ்ஃபர்: குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டெப்ட் ஃபண்டில் இருந்து அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி ஃபண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறது.
- படிப்படியாக நிறைவுசெய்தல்: மொத்த பணமும் ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றப்படும் வரை இந்தச் செயல்முறை தொடர்கிறது, இதனால் சிஸ்டமேட்டிக் முறையில் முதலீடு தொடர்வது உறுதிசெய்யப்படுகிறது.
- ரிஸ்க் மேலாண்மை: படிப்படியாக டிரான்ஸ்ஃபர் செய்யும் இந்த முறையானது மார்க்கெட்டில் பெரிய தொகையை முதலீடு செய்வதைத் தவிர்ப்பதன் மூலம், மார்க்கெட் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கிறது.
ஒரு முதலீட்டாளரிடம் ₹1,20,000 முதலீடு செய்ய இருக்கிறது, ஆனால் அவர் லம்ப்சம் முதலீட்டினால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் வருடத்திற்கு 5% ரிட்டர்ன் அளிக்கும் டெப்ட் ஃபண்டில் ₹1,20,000 முதலீடு செய்கிறார். STP மூலம் அவர் ஒவ்வொரு மாதமும் ₹10,000 ஒரு ஈக்விட்டி ஃபண்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடிவுசெய்கிறார். அடுத்த 12 மாதங்களில்:
- டெப்ட் ஃபண்டில் இருந்து பணம் ஈக்விட்டி ஃபண்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும், மீதமிருக்கும் தொகைக்கான வட்டி வரும்.
- உதாரணமாக, முதல் முறை டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு ₹1,10,000 டெப்ட் ஃபண்டில் மீதம் இருக்கும், அதற்கு தொடர்ந்து வட்டி கிடைத்துவரும், இதனால் ஈக்விட்டியில் பணம் மொத்தமாக முதலீடு செய்யப்படுவது தவிர்க்கப்படுகிறது, அதோடு ஓரளவு ரிட்டர்னும் தொடர்ந்து கிடைக்கிறது.
- காலப்போக்கில், இந்த அணுகுமுறை ஈக்விட்டி பர்ச்சேஸ்களுக்கு ஆன செலவை சமன் செய்து, விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்டுகளும், விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்டுகளும் வாங்கப்படுகிறது.
STPகள் செயல்திறன் மிகுந்தவையாக இருந்தாலும், ஈக்விட்டி முதலீடுகள் வளர்ந்து கூட்டு வட்டி முறையில் பெருகுவதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால், நீண்டகால இலக்குகளுக்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும். குறைவான ரிஸ்க் தாங்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் முதலீட்டின் பெரும்பகுதியை டெப்ட் முதலீடு செய்யலாம், அதிக ரிட்டர்ன் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் அதிகத் தொகையை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டும். இருந்தாலும், ஈக்விட்டி மார்க்கெட் நீண்ட காலம் பலவீனமாக இருக்கும்போது ரிட்டர்ன்கள் குறைவதைத் தவிர்க்க முடியாது என்பதால், மார்க்கெட் வீழ்ச்சி ஆபத்தை STPகளால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது. அதுமட்டுமின்றி, ஒரு STP-இல் உள்ள ஃபண்டுகள் உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப செயல்படுகின்றனவா என்று உறுதிசெய்துகொள்ள, ஃபண்டுகளின் செலவு விகிதங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
முதலீட்டு உத்தியைப் பொறுத்தவரை, ஒரு STP-ஐத் தொடங்குவதற்கு முன்பு நிதி இலக்குகள், ரிஸ்க் தாங்கும் திறன், முதலீட்டுக் கால வரம்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டியது முக்கியமாகும். STPகள் பல நன்மைகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த பலன் என்பது மார்க்கெட்டின் செயல்திறனைப் பொறுத்தே அமையும், அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
பொறுப்புதுறப்பு: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.