மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் சிக்கலானதாகவோ அல்லது அச்சத்துக்குரியதாகவோ உள்ளது. மிகவும் அடிப்படை நிலையில் அதனை உங்களுக்கு எளிதாக்கித் தர நாங்கள் முயற்சிக்கிறோம். குறிப்பாக, பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் (அல்லது முதலீட்டாளர்களின்) மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி மியூச்சுவல் ஃபண்ட் உருவாக்கப்படுகிறது. இந்த நிதி, தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படும்.

பொதுவான முதலீட்டு நோக்கத்தைக் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டுகின்ற ஒரு டிரஸ்ட்டாக இது இருக்கும். அதன் பின்னர், ஈக்விட்டி, பாண்டுகள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் மற்றும்/அல்லது பிற செக்யூரிட்டிகளில் அந்த நிதியானது முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் யூனிட்கள் வழங்கப்படும். யூனிட் என்பது ஹோல்டிங் நிதியின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டு முதலீட்டின் மூலம் உருவாக்கப்படும் வருமானம்/இலாபங்கள், ஒரு திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு அல்லது NAV -ஐ கணக்கிடுவதன் மூலம் சில குறிப்பிட்ட செலவுகளைக் கழித்த பின்னர் முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார முறையில் பகிர்ந்து கொடுக்கப்படும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பது சாமன்ய நபர்களும் செய்யக் கூடிய முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும். இது குறைந்த செலவில் தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் பரந்த அளவிலான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் எப்படி வேலை செய்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட் பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைச் சேகரித்து ஒன்று திரட்டி, ஸ்கீம் ஆஃபர் ஆவணங்களின்படி செக்யூரிட்டிகளின் டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோவை வாங்குகிறது. இப்போது மியூச்சுவல் ஃபண்ட் எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். 

முதலீட்டாளர்கள் யூனிட்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்குப் பணம் கொடுத்துப் பங்களிக்கும்போது பணம் ஒன்று திரட்டப்படுகிறது. இதில் ஒவ்வொரு யூனிட்டும் ஃபண்டிலும் அதில் உள்ள அசெட்டுகளிலும் உள்ள குறிப்பிட்ட விகிதத்திலான உரிமையைக் குறிக்கிறது. மியூச்சுவல் ஃபண்டின் நோக்கம் குறிப்பிட்ட முதலீட்டு உத்தியைப் பின்பற்றுவதும், எந்த வகையான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வது என்பதைத் தீர்மானிப்பதும் ஆகும். இது மார்க்கெட் ரிஸ்க்குகளுக்கு உட்பட்டதாகும்.

மியூச்சுவல் ஃபண்ட்களின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்

மியூச்சுவல் ஃபண்ட்களின் பண்புகளும் நன்மைகளும்:

1. தொழில்முறை நிபுணத்துவத்துடன் நிர்வகிக்கப்படுகிறது: ஆராய்ச்சியின் அடிப்படையில் விவரமாக முடிவெடுக்கும் தொழில்முறை நிபுணர்களால் மியூச்சுவல் ஃபண்ட்கள் நிர்வகிக்கப்படுகின்றன. 

2. அவசியம் ஏற்படும்போது மியூச்சுவல் ஃபண்ட்களை எளிதில் பணமாக மாற்றலாம்: முதலீட்டாளர்கள் எந்த ஒரு வணிக நாளிலும், ஃபண்டின் பொருந்தக்கூடிய நெட் அசெட் வேல்யூவில் (NAV) மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கவோ விற்கவோ முடியும்.

3. பல வகையான ஃபண்ட்கள் உள்ளன: பல்வேறு முதலீட்டு நோக்கங்கள் மற்றும் ரிஸ்க் தாங்கும் திறன்களுக்குப் பொருந்தும் வகையில், ஈக்விட்டி ஸ்கீம்கள், டெப்ட் ஸ்கீம்கள், ஹைப்ரிட் ஸ்கீம்கள், சொல்யூஷன் ஓரியண்டட் ஸ்கீம்கள் போன்ற பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. 

4. தானியங்கு முதலீடு: சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையின் மூலம் தொடர்ச்சியான கால இடைவெளிகளில் தானாகவே முதலீடு செய்யும்படி அமைப்பதற்கான வசதியை மியூச்சுவல் ஃபண்ட்கள் அளிக்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங்கின் நன்மையும், நீண்டகாலவாக்கில் கூட்டு வட்டியால் கிடைக்கும் பலன்களும் கிடைக்கின்றன.  
[சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான், சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் போன்ற பிற வசதிகளும் கிடைக்கின்றன.]

5. மியூச்சுவல் ஃபண்ட்களை டைவர்சிஃபிகேஷன் செய்ய முடியும்: மியூச்சுவல் ஃபண்ட்கள் மொத்த பணத்தையும் ஒன்றாகத் திரட்டி முதலீடு செய்வதால், டைவர்சிஃபிகேஷன் செய்யப்பட்ட செக்யூரிட்டிகளின் போர்ட்ஃபோலியோவை முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் வழங்குகின்றன. ஒரே முதலீடு சரியாக ரிட்டர்ன் கொடுக்காமல் போகும் ஆபத்தை இது குறைக்கிறது. 

6. சௌகரியமானது: வாங்குவது, விற்பது, போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பது ஆகிய முதலீட்டுச் செயல்களை மியூச்சுவல் ஃபண்ட்கள் எளிமைப்படுத்துகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு சிரமம் குறைவதுடன் நேரமும் மிச்சமாகிறது. 

7. மியூச்சுவல் ஃபண்ட்கள் குறைந்த செலவில் செய்யக்கூடிய முதலீடுகளாகும்: குறைந்த மூலதனத்தையே கொண்டிருந்தாலும் கூட, முதலீட்டாளர்கள் டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பதை மியூச்சுவல் ஃபண்ட்கள் சாத்தியமாக்குகின்றன.  

8. வரிவிதிப்பு நன்மைகள்: சில மியூச்சுவல் ஃபண்ட்கள் வரி செலுத்துபவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் வரிவிதிப்பு சலுகைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. உதாரணமாக ELSS ஸ்கீம்கள் வரிச் சலுகைகளை அளிக்கின்றன. ஆனால் இவற்றுக்கு லாக்-இன் காலம் இருக்கும். 

9. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சூழல்: முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலன் காக்கவும் மியூச்சுவல் ஃபண்ட்கள் SEBI அமைப்பால் மேற்பார்வையிடப்படுகின்றன.   

10. SCORES: SCORES என்பது SEBI வழங்கும் ஆன்லைன் குறை தீர்த்தல் வசதியாகும். மியூச்சுவல் ஃபண்ட்கள் தொடர்பான புகார்களை இதில் சமர்ப்பிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது பற்றிய படிப்படியான வழிகாட்டல் இதோ:

படி 1: உங்கள் நிதி இலக்குகளையும் ரிஸ்க் தாங்கும் திறனையும் மதிப்பீடு செய்யுங்கள்

நீங்கள் முதலீடு செய்வதற்கான காரணத்தையும், முதலீட்டின் இலக்கையும் முடிவு செய்யுங்கள். எந்த அளவு ரிஸ்க்கை நீங்கள் எதிர்கொள்ள முடியும் என்று புரிந்துகொள்ளுங்கள்.

படி 2: பல்வேறு வகை மியூச்சுவல் ஃபண்ட்களைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள் 

பல்வேறு தேவைகளுக்குப் பொருத்தமான பல்வேறு வகை மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கால வரம்பு, இலக்குகள், ரிஸ்க் தாங்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு வகை மியூச்சுவல் ஃபண்ட்கள் இவை:

●    ஈக்விட்டி ஸ்கீம்கள்
●    டெப்ட் ஸ்கீம்கள்
●    ஹைப்ரிட் ஸ்கீம்கள்
●    சொல்யூஷன் ஓரியண்டட் ஸ்கீம்கள்
●    மற்ற ஸ்கீம்கள் 

படி 3: நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தளத்தைத் தேர்வுசெய்யுங்கள்

டைரக்ட் பிளானின் கீழ், மியூச்சுவல் ஃபண்டில் இருந்து நேரடியாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கலாம் அல்லது ரெகுலர் பிளானின் கீழ் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரிடம் இருந்தும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை நீங்கள் வாங்கலாம்.


படி 4: அந்தத் தளத்தில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்

உங்களிடம் ஏற்கனவே கணக்கு இல்லை என்றால், நீங்கள் தேர்வுசெய்த மியூச்சுவல் ஃபண்ட் அல்லது தளத்தில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்.

படி 5: மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்குங்கள்

நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் ஃபண்டைத் தேர்வுசெய்து, நீங்கள் தேர்வு செய்த டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தளத்தின் மூலம் உங்கள் ஆர்டரைச் சமர்ப்பியுங்கள்.
ஆஃபர் ஆவணத்தை கவனமாகப் படியுங்கள், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் நிதி ஆலோசகரிடம் பேசுங்கள். 

படி 6: உங்கள் முதலீட்டைக் கண்காணியுங்கள்

உங்கள் முதலீடு உங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகும் வகையிலேயே செல்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவ்வப்போது உங்கள் முதலீட்டை ஆய்வு செய்யுங்கள். 

படி 7: தேவைப்பட்டால் உங்கள் முதலீட்டில் மாற்றங்களைச் செய்யுங்கள்

கிடைக்கும் டிவிடெண்டுகளையும் மூலதன லாபங்களையும் மீண்டும் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது ரொக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள். முக்கியமாக மார்க்கெட்டின் போக்குகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் எவ்வளவு ரிட்டர்ன்கள் கிடைத்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், அதைக் கணக்கிட மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம். 

படி 8: வரி விதிப்பு சம்பந்தப்பட்ட விளைவுகளைப் பற்றி யோசித்துக் கொள்ளுங்கள்

மூலதன லாபத்திற்கு விதிக்கப்படும் வரிகள் பற்றி தெரிந்து வைத்திருங்கள். 

மியூச்சுவல் ஃபண்ட்களிலிருந்து நான் பணத்தை வித்ட்ரா செய்ய முடியுமா?

முடியும். மியூச்சுவல் ஃபண்ட்களில் இருந்து நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்ய முடியும், ஆனால் அதற்கான செயல்முறையும் அதனால் ஏற்படும் விளைவுகளும் உங்கள் மியூச்சுவல் ஃபண்டின் வகை, உங்கள் முதலீட்டு காலம் மற்றும் உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்து இருக்கும். 

மியூச்சுவல் ஃபண்ட்களின் மீதான வரி விதிப்புகள்

மியூச்சுவல் ஃபண்ட்களின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இரண்டு வகைகளில் வரி விதிக்கப்படும், அவை:

a) டிவிடெண்டுகள் - டிவிடெண்டுகளுக்கு உங்கள் வரி விதிப்பு வரம்பின்படி வரி விதிக்கப்படும். 

b) மூலதன லாபங்கள்: மூலதன லாபங்களுக்கு கீழே உள்ள அட்டவணையின்படி வரி விதிக்கப்படும்:

ஃபண்டின் வகை

குறுகிய கால மூலதன லாபங்கள்

நீண்ட கால மூலதன லாபங்கள்

ஈக்விட்டி ஃபண்ட்கள்

12 மாதங்களுக்கும் குறைவான கால அளவு

12 மாதங்கள் மற்றும் அதற்கு மேல்

டெப்ட் ஃபண்ட்கள்

எப்போதும் குறைவான கால அளவு

 

ஹைப்ரிட் ஈக்விட்டி ஓரியண்டட் ஃபண்ட்கள்

12 மாதங்களுக்கும் குறைவான கால அளவு

12 மாதங்கள் மற்றும் அதற்கு மேல்

ஹைப்ரிட் டெப்ட் ஓரியண்டட் ஃபண்ட்கள்

எப்போதும் குறைவான கால அளவு

 

இறுதிக் கருத்து

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உங்களுக்குப் பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது, அதுமட்டுமின்றி எளிதில் அணுகக்கூடிய முதலீட்டு முறையாகவும் இருக்கிறது. முதலீட்டுப் பயணத்தை நீங்கள் தொடங்கும் போது, அதனுடன் தொடர்புடைய மார்க்கெட் ரிஸ்க் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்